புதிய புறநகர் பேருந்து நிலைய இடம் பராமரிப்பு இல்லாததால் படுமோசம்
ஊரப்பாக்கத்தில் அமையுள்ள புதிய பேருந்து நிலைய இடத்தில், கழிவுநீர் மற்றும் குப்பை தேங்கிக் கிடப்பதால், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை முறைப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, கோயம்பேட்டில் உள்ள, புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காண முடிவெடுக்கப் பட்டது.
அதன்படி, வண்டலுார் - ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில், சி.எம்.டி.ஏ.,வுக்கு சொந்தமான இடத்தில், புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரப்பு, 88 ஏக்கர் அளவுள்ள இந்த இடத்தில், புதிய புறநகர் பேருந்து நிலையத்தை, சர்வதேச தரத்தில் மேற்கொள்ள, சி.எம்.டி.ஏ., முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பேருந்து நிலைய மாதிரி வரைபடத்தை, ஒரு மாதத்திற்குள் அளிக்க வேண்டும் எனவும், இதற்காக தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனத்துக்கு, உத்தரவும் இட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்து நிலையத்திற்கான இடத்தில், குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் மற்றும் குப்பை லாரிகள் மூலம் கொட்டப்படுவதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
பேருந்து நிலையம் அமையுள்ள நிலையில், இங்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளாததால், மக்கள் இந்த பேருந்து வளாகத்தை எப்படி பயன்படுத்துவர் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், வளாகம் அமைக்கும் முன்னரே, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், பயன்பாட்டிற்கு பின், எப்படி இருக்குமோ என்ற நிலையிலும் அவர்கள் உள்ளனர்.